தென்காசியில் காதலித்ததால் பெற்றோராலேயே கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட கிருத்திகா பட்டேல் வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவரின் உறவினர்கள் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திர மேஷிஹா ஆகியோருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக அவருடைய காதல் கணவர் மாரியப்பன் வினித் என்பவர், தென்காசியின் குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த மாதத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம் சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்தி பட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம் சந்திரமேஷிஹா ஆகிய 4 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்தி பட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகிய 8 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கிருத்திகா பட்டேல் முன்னுக்கு பின்னாக முரணான தகவல்களை தனது வாக்குமூலத்தில் வழங்கி உள்ளார். பட்ட பகலில் ஒரு தரப்பினரை அடித்து காரில் கடத்தியுள்ளனர் வழக்கிற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளது. மேலும் இந்த வழக்கில் கிருத்திகா குற்றவாளியாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதி, “பட்ட பகலில் பொது இடத்தில் வீடு புகுந்து அடித்து ஒருவரை கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடுமையான குற்றம். தலைமறைவாக உள்ள யாருக்கும் முன்ஜாமின் வழங்க முடியாது” எனக்கூறிய நீதிபதி "இந்த மனுவை மனுதாரர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என தெரிவித்தார். தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மேலும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களின் சிறைக்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமினில் வெளியே வருபவர்கள், தினந்தோறும் காலையும் மாலையும் தென்காசி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து பிறப்பிக்க வேண்டும் என நிபந்தனையும் பிறப்பித்துள்ளார்.