நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, தலைமை செயலர் தரப்பில் வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முதல்படியாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பளவு குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை அரசு தரப்பிலிருந்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
தலைமை செயலர் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பான முழு விவரத்துக்கு: ”நீர்நிலைகளை பாதுகாக்க அர்பணிப்பபோடு செயல்படுகிறோம்”- நீதிமன்றத்தில் தலைமை செயலர் அறிக்கை
இந்த அறிக்கை, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட, தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் தரப்பில், “எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும். ஆகவேதான் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களைதான் அரசிடம் கேட்டோம். ஆனால் அவை சமர்ப்பிக்கப்படவில்லை. அந்தவகையில் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது. 57,688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் 8,797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பார்க்கையில், வெறுமனே அறையில் உட்காரத்தான் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்” என எச்சரித்தனர்.
மேலும், “இவ்விஷயத்தில் முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக நாங்கள் உத்தரவிட வேண்டி வரும். இரண்டாவது முறையும் இது தொடருமானால் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட நேரிடும். அதிகாரிகள் செய்யும் தவறுக்காக அரசை குறை கூற முடியாது. அதிகாரிகள் செயல்பாடின்மைதான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்றாலும், அதைவிட அதிகமான பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளது. ஆக்கிரமிப்புகளை தொடர்ந்தவர்கள்மீது அதிகாரிகள் தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்காததால்தான், ஆக்கிரமிப்பென்பது மீண்டும் மீண்டும் முளைக்கிறது.
நீர் நிலைகளில் எல்லையை அளவீடு செய்து அரசு இன்னும் வரையறுக்கவில்லை. நீர்நிலைகளை கண்டறிவதும், அதன் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் பெரிய விஷயமல்ல. ஆகவே அதை அரசு செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காகத்தான் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. ஆகவே அதை பின்பற்றாவும். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதி தள்ளிவைத்தனர்.