பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியும், அவரது மனைவி மலர்க்கொடியும் வயலில் அமைத்திருந்த மின்வேலியை அகற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயலில் பயிரிடப்பட்டிருந்த மக்காச் சோளப்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றி, எலி, அணில் போன்ற வன விலங்குகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனுமதியின்றி மின்கம்பி வேலி அமைத்துள்ளனர். தினந்தோறும் இரவு நேரங்களில் மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு, காலையில் அதனை அகற்றிவிடுவது வழக்கமாக வைத்திருந்தனர்.
(அரசு மருத்துவனையில் உறவினர்கள்)
இன்று வயலைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்கம்பியை பெரியசாமி அப்புறப்படுத்தும்போது, மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார். காயங்களுடன் மயங்கி விழுந்தவரை மனைவி மலர்கொடி ஓடிச்சென்று காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
(மின்வேலி அமைக்கப்பட்டிருந்த வயல்வெளி)
இதுபற்றி அரும்பாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமணமாகாத பொறியியல் பட்டதாரி மகள் சவுமியாவை (28) தனியே விட்டுவிட்டு கணவன்-மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.