ஈரோட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலையைபோல, அதனை சமாளிக்க மக்கள் பயன்படுத்தும் காட்டன் துணிகள் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதாவது 109 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகிறது.
இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் நடுத்தர மக்கள், தங்களின் குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து கொளுத்தும் வெயிலிரும் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சூழலில்தான் ஈரோட்டில் காட்டன் துணி விற்பனை சூடுபிடித்துள்ளது. மிகவும் பழமையான ஜவுளி சந்தையான அப்துல்கலாம் சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் ஜவுளி சந்தைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் காட்டன் ரகத்தில் சட்டை, சேலை, லுங்கி உள்ளிட்டவற்றை பெருமளவு பெற்று செல்வதால், இந்த ஆண்டு காட்டன் துணிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.