சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை
சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை
Published on

தஞ்சாவூரில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பாணையை ஒட்டியுள்ளது.

தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி விஜயமண்டபத் தெரு, மிஷன் சாலையில் சசிகலாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. மொத்தம் 10,500 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. இந்த வீட்டில் தற்போது ஜெ.மனோகரன் என்பவர் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த வீட்டுக்கு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியது. அதில், “இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில், எந்த நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுமானம், அவ்வழியே செல்பவர்களுக்கும், கட்டடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்திற்கும், பள்ளிக்கும் அருகில் உள்ளது.
 எனவே, இந்த அபாயகரமான கட்டடத்தை எந்த விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுமக்களுக்கும், கட்டடத்தின் உள் இருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டடத்தைத் அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. 

தவறும்பட்சத்தில் தங்கள் மீது மாநகராட்சி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இச்செயலுக்கான செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுவரை இந்தக் கட்டடம் இடிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வீட்டின் முகப்புப் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் அறிவிப்பாணையை ஒட்டினர். அதில், “இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால், அலுவலக அறிவிப்பின்படி உட்புறம் செல்லுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com