மதுரையில் பாதாள சாக்கடை பணியின் போது மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சகதியில் சிக்கி உயிரிழந்தார்.
மதுரை கூடல் புதூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டபின் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படாத இடங்களில், மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலம் இரண்டுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றைய தினம் பாதாள சாக்கடை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வந்தனர். இதற்காக பள்ளம் தோண்டும் பணியின் போது மேலே உள்ள மண் சரிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மேலே விழுந்தது. இந்த விபத்தின்போது இருவர் தப்பிய நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளர் மண்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டனர். மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற விபத்து ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
பகுதி பகுதியாக பாதாள சாக்கடை திட்டப் பணியை மாநகராட்சி மேற்கொள்ளாமல் மொத்தமாக ஒரே சமயத்தில் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதனால் நடந்துகூட செல்லமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தால் மழைக்காலம் என்பதனால் பணிகளை துரிதமாக செய்ய முடியாது. அதனால் இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் பொறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர் எனவும், மக்கள் அன்றாடம் அவதி அடைவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்தான் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் மேற்கொண்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடிநீர் குழாயில் அதிக அழுத்தத்துடன் நீர் வந்த காரணமாகவே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் முறையாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் தவறு யார் செய்திருந்தாலும் சட்டரீதியான கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். உயிரிழந்த தொழிலாளி சக்திவேல் குடும்பத்திற்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் பெற்று தர மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் களிமண் இருக்கும் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அந்த பணியை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். அதேபோல் 10 அடி ஆழத்திற்கு மேல் பணி மேற்கொள்ளும் இடங்களையும் ஆய்வுசெய்து அந்த பணியையும் நிறுத்தி வைத்துள்ளோம். தொழிலாளர்கள் பணி மேற்கொள்ளும் பொழுது சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் இருந்தார்களா இல்லையா என்பது குறித்து காவல்துறை மூலம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.