கொரோனா அச்சம் காரணமாக கோவை மத்திய சிறையிலிருந்து 136 விசாரணை கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சிறையிலுள்ள விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கோவை மத்திய சிறையில் இருந்த ஐந்து பெண் கைதிகள் உட்பட 136 விசாரணை கைதிகள் சொந்த ஜாமீனில் நேற்று நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
அண்மையில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் ஒருவேளை கொரோனா தொற்று இருந்து, அது மற்ற தண்டனை கைதிகளுக்கும், விசாரணை கைதிகளுக்கும் பரவமால் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொரோனா குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட ஹீலர் பாஸ்கரும் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.