ஒரு வாரத்தில் கொரோனோ பரவல் 12.5 சதவீதமாக உயர்வு: மதுரையின் தற்போதைய நிலை என்ன?

ஒரு வாரத்தில் கொரோனோ பரவல் 12.5 சதவீதமாக உயர்வு: மதுரையின் தற்போதைய நிலை என்ன?
ஒரு வாரத்தில் கொரோனோ பரவல் 12.5 சதவீதமாக உயர்வு: மதுரையின் தற்போதைய நிலை என்ன?
Published on

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1024 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,040 அதிகரித்துள்ளது. இதுவரை 33, 256 பேர் குணமடைந்துள்ள நிலையில் 607 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 6,262 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிற மாவட்டத்தை சேர்ந்த 476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறப்பு வார்டில் 103 படுக்கைகள்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் மையம் என மொத்தம் 6278 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் தற்போது 2712 படுக்கைகள் காலியாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் 1561 படுக்கைகள் உள்ள நிலையில் 1458 படுக்கைகள் நிரம்பிவிட்டது. இதனால் தற்போது 103 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.

இதனால் புதிதாக சிகிச்சை பெற வருபவர்கள் உடனடியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து புதிதாக வருபவர்களுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் படுக்கைகள் நிலவரம்

மதுரை அரசு மருத்துவமனையில் 1150 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 1100 ஆக்சிஜன் படுக்கை நிரம்பிவிட்டதால், தற்போது சுமார் 50 படுக்கை மட்டுமே காலியாக உள்ளது. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் நாள்தோறும் 20 ஆயிரம் லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 1319 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ள நிலையில் 1200 படுக்கைகள் நிரம்பிவிட்டதால் தற்போது 119 படுக்கை மட்டுமே காலியாக உள்ளது.

தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் 

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களுக்கே ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் புதிதாக வரும் உள் நோயாளிகளை அனுமதிக்க அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். மதுரையில் உள்ள தனியார் இரு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக கொரோனோ பரவல் 12.5 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி பகுதிகளில் 70 சதவீதமும் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 30 சதவீதமும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com