தமிழகத்தில் மத்திய சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் சிறையில் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்த 13 சிறைவாசிகளுக்கும், வேலூர், பாளையங்கோட்டை சிறையிலும் தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்த 82 சிறைவாசிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும், விருப்பம் தெரிவித்த 647 சிறைவாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை படி, கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 817 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 83 பேரும், கோவையில் 280 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 258 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 709 ஆக உள்ளது. ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.