மே 5 - கொரோனா விரைவு செய்திகள்: கொரோனா இறப்பு முதல் கள்ளச்சந்தையில் படுக்கைகள் வரை
தமிழகத்தில் ஒரே நாளில் 23,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 167 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள் காலை முதல் அமலுக்கு வருகின்றன. மளிகை, காய்கறி, பலசரக்கு கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
கொரோனா கட்டுப்பாடாக டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. புள்ளிவிவரங்களை கண்டு வேதனையடைவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் உயிர்பயத்துடன் இருக்கும் மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாதம் 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகம் செல்லத் தேவையில்லை என புதிய கட்டுப்பாடு காலத்தில் சலுகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஊடகத்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 800 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸிலேயே கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் தனியார் மருத்துவமனை படுக்கைகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக பாஜக எம்.பி.குற்றச்சாட்டியுள்ளார். தவறிழைத்த மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.