கடலூர்: கோயம்பேடு சந்தையில் இருந்து மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேட்டில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வந்து இறங்குகின்றன. பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாக, பழ வியாபாரி ஒருவர், மலர் வியாபாரிகளான தந்தை - மகன் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீண்டது. இதன் தொடர்ச்சியாக சந்தையுடன் தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோயம்பேடு சந்தையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற 38 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து அரியலூர் சென்றவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் லாரிகள் மூலம் கோயம்பேட்டுக்கு காய்கறிகளை கொண்டு சென்று இறக்கிவந்துள்ளனர். இதில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையுடன் தொடர்பிலிருந்த கடலூரைச் சேர்ந்த 17 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு மூலம் சென்னை 50, அரியலூர் 19, கடலூர் 17, விழுப்புரம் 2, பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.