தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு இன்னும் உச்சத்திலேயே இருக்கிறது. இதனால் தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தென் தமிழத்தின் திருநெல்வேலிக்கு, தென்காசி - கன்னியாகுமரி வழியாக கேரளாவிலிருந்து ரயில் வழியாக வரும் நபர்களுக்கு எவ்வித கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்று பரவல் நாள் ஒன்றுக்கு 25 நபர்களுக்கு குறைவாகவே உள்ள நிலையிலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நாள்தோறும் தென்காசி மாவட்டம் வழியாகவும் கன்னியாகுமரி மாவட்டம் வழியாகவும் திருநெல்வேலிக்கு நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.
ஆறு ரயில்கள் கேரளாவில் இருந்து திருநெல்வேலி வழியாக தினமும் செல்கிறது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வழியாக கொரோனா பரவல் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது என்பதை மனதில்கொண்டு, தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணையொன்றை பிறப்பித்திருந்தார்.
அதன்படி கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் அனைவரும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து தங்களுக்கு தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டது. இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இன்று காலை கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் - நாகர்கோவில் - திருநெல்வேலி வழியாக சென்னை செல்லும் ரயிலில், திருநெல்வேலியில் இறங்கிய 50-க்கும் மேற்பட்ட நபர்களில் ஒருவருக்குகூட பரிசோதனை சான்று சரிபார்க்கப்படவில்லை. அவர்களிடம் சான்று இருக்கிறதா என்றுகூட அதிகாரிகள் சரிவர பார்க்கவில்லை. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து வெளியேற நிறைய பாதைகள் இருப்பதால், வெவ்வேறு வாயில்கள் வழியாக நிறையபேர் வெளியே சென்றனர். ஒரு சிலர் மட்டும் பிரதான நுழைவு வாயில் வழியாக வெளியே வந்தனர்.
அவர்களிலும், தாமாக முன்வந்து வரிசையில் நின்ற ஒரு சிலருக்கு மட்டும் பெயரளவில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றவர்கள் எவ்வித பரிசோதனையுமின்றி வெளியேறினர். கேரளாவில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படும் நிலையில், அங்கிருந்து வருபவர்களை முறையாக விசாரிக்காமல்; அரசின் அறிவிப்பை உதாசீனப்படுத்தும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு, அரசு தரப்பிலும் மாநகராட்சி தரப்பிலும் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
- செய்தியாளர்: நாகராஜன்