சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டே வருகின்றன.
தமிழகத்தில் 2058 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கோயம்பேடு காய்கறி சந்தையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிக் கடை நடத்திவரும் 64 வயது மதிக்கத்தக்க நெற்குன்றத்தை சேர்ந்த ஒருவர், கோயம்பேடு காய்கறி சந்தையில் வேலை செய்துவரும் மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் மற்றும் மொத்த விற்பனை அங்காடியில் H பிளாக்கில் காய்கறிகள் விற்பனை செய்துவரும் விற்பனையாளர் என மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மூன்று பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் , காய்கறிக் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என பலரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.