திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பிரியாணி வழங்கி வருகிறார் விளையாட்டு வீரர் ஒருவர்.
இயற்கை பேரிடர்கள் வரும்போது தான் நம்மிடம் இருக்கும் மனித நேயம் வெளிப்படும். இன்றைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவகைகளில் தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் உதவி வருகின்றனர். அந்த வரிசையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ள, திருச்சி காஜாநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வெங்கடேஷ். திருச்சியில் சிலகாலம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் இன்று தனியாக தொழில் செய்து வருகின்றார்.
’பேரிடர் காலத்தில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிட வேண்டும் என்ற நோக்கத்தோடும் விளையாட்டு வீரர் என்ற அடையாளத்தோடு கிடைத்த நண்பர்களின் உதவியோடு தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் உணவு வழங்கலாம் என்று முடிவு செய்து உணவு வழங்க தொடங்கினோம்’ என பேச ஆரம்பித்தார் வெங்கடேஷ்.
மேலும், ‘தினமும் 100 நபர்களுக்கு என்று தொடங்கி படிப்படியாக இன்று 500 நபர்களுக்கு கிட்டத்தட்ட 11 நாட்களாக உணவு வழங்கி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் இருப்பதுபோல் ஒரு மனநிறைவை உருவாக்குவதற்காக இன்றைக்கு 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வழங்கியிருக்கிறோம். தினமும் மருத்துவமனை பகுதிகளுக்கு சென்று வருவதால் என்னுடைய குடும்பத்தாருக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தனது குடும்பத்தினரை சந்திக்காமல் தூரமாக இருந்து அவர்கள் தயார் செய்து தரும் உணவுகளை கொண்டு சென்று உதவி வருகிறோம்.
காலையிலிருந்து உணவை தயார் செய்வதில் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் உணவை தயார் செய்த பின்னர் அதனை தேவையானர்களுக்கு கொண்டு சேர்ப்பதே என்னுடைய பணியாக வைத்திருக்கிறேன். சென்ற ஆண்டு 140 குடும்பங்களுக்கு பண உதவி செய்ததை விட இந்த ஆண்டு முகம் தெரியாத நபர்களுக்கும் உதவிடும்போது மனம் மிகவும் நிறைவடைகிறது’ என்கிறார் வெங்கடேஷ்.