மதுரையில் பள்ளிவாசலில் உணவு சமைத்து உணவின்றி தவிப்போர்க்கு இஸ்லாமிய இளைஞர்கள் உணவு வழங்கி உதவி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் நேற்று முதல் வரும் 30ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தெருக்களில் வசிக்கும் ஆதரவற்றோர், குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியோர் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மதுரை கீழமாசி வீதியில் உள்ள தாசில்தார் பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து அதனை பொட்டலங்களாக தயார் செய்து மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்சென்று உணவின்றி தவிப்போருக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.
மதுரை ரயில் நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரையின் மாசி வீதிகள், கீழவாசல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று அங்கு ஆதரவற்று இருக்கக்கூடிய முதியோர்கள், யாசகர்கள் ஆகியோருக்கு உணவு பொட்டலங்களை வழங்குகின்றனர். ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவிர்ப்பவர்களுக்கு தினந்தோறும் பள்ளிவாசலில் விதவிதமாக உணவு சமைத்து அன்றாடம் பொதுமக்களின் பசியை தீர்த்து வரும் இஸ்லாமிய இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.