தருமபுரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தவருக்கு செவிலியர்கள் ஆக்சிஜன் வைத்து சிகிச்சை அளித்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒற்றை இலக்குடன் தொடங்கிய கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக 150-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 153 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 8721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 7612 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். 1045 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் கொரோனா பரிசோதனை செய்ய இன்று பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 500 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பரிசோதனை செய்ய வரும் அனைவருமே காய்ச்சல் நோயாளிகள் அல்ல. அறிகுறிகள் இல்லாத நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் வருகின்றனர்.
தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டங்களான திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகரி, மாவட்டத்தில் இருந்து வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கொரோன வைரஸ் பாதித்து மூச்சுவிட சிரமப்படுபவர்கள் ஆக்சிஜனுடன் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை செய்யும் இடத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததாலும் பொதுமக்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் இல்லாததாலும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. யார் முதலில் செல்வது என்று சண்டையிட்டுக் கொள்கின்றனர். மேலும் கூட்ட நெரிசலில் திடீரென பரிசோதனைக்கு வந்த ஒருவர் மயக்கமடைந்தார். இதனை கண்டு அதிரிச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரை காப்பாற்றுங்கள் என இருகரம் கூப்பி கண்ணீர் விட்டு கதறினார்.
தொடர்ந்து செவிலியர்கள் விரைந்து வந்து மயக்கமடைந்தவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தி சிகிச்சை வழங்கினர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.