"தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்
"தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக இல்லை என்பதை ஐசிஎம்ஆர் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. கொரோனா நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் இல்லாதவர்கள் இரண்டு பேரையும் அரசு ஒரே விதமாகத் தான் கவனித்து வருகிறோம். வயதிலேயே மூத்தவர்கள், கேன்சர்,இதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்படும்போதுதான் மருத்துவர்களுக்குச் சவாலாக இருக்கிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த விஜயபாஸ்கர் " தமிழகத்தில் 75,000 படுக்கைகள் உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக புதிய சிடி ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கிண்டியில் 750 படுக்கைகள் தயாராகி வருகின்றன. கொரோனா தடுப்பில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு Zinc ஆர்செனிக் ஆல்பம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் 46 லட்சம் முகக்கவசங்கள் தமிழகத்தில் வழங்கப்பட்டுவிட்டன. முன் களப்பணியாளர்களுக்கான ஒருமாத ஊதியத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன" என்றார்

இறுதியாக " தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக எவ்வளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறோம். தமிழகத்தில் 12,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள்., 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொரோனா பணியில் இருக்கிறது. மேலும் ரெமிடெசீவர் மருந்தைத் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. கொரோனாவிலிருந்து உயிர்காக்கும் 3 வகை மருந்துகள் தமிழகத்தில் உள்ளன" என்றார் விஜயபாஸ்கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com