பொள்ளாச்சியில் மாரியம்மன் வேடமணிந்து கிராம மக்கள் மத்தியில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மக்கள் மத்தியில் அரசு விழுப்புணர்வு விளம்பரங்களை செய்துள்ளது. இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனத்தின் தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த ஒரு விளம்பர நிறுவனம் மக்கள் மத்தியில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சுற்றி உள்ள கம்பாலப்பட்டி, அர்த்தனாரிபாளையம், குள்ளேகவுண்டனுர் உள்ளிட்ட கிராமங்களில் மாரியம்மன் வேடமணிந்து வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு சானிடைசர், முககவசம், உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஊரில் மாரியம்மன் திருவிழா துவங்கியதும் முதலில் ஊரில் கம்பம் நட்டு எல்லையில் காப்பு கட்டி வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளூர் ஆட்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் கிராமங்களில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
மஞ்சள் நீரில் வேப்பிலை கலந்து நீராடியும், விரதம் இருந்து பின்னர் சத்தான உணவுகளை உட்கொள்வதும் என பல நல்ல விஷயங்களை முன்னோர்கள் கற்று கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பழக்கக்கங்களை தொற்று காலத்தில் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக விளம்பரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.