மயங்கி விழுந்த மூதாட்டிக்கு கொரோனா அச்சத்தையும் மீறி மனித நேயத்தோடு உதவி செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண்.ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராத நிலையில் இருசக்கரவாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூதாட்டி வழியிலேயே உயிரிழந்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த மூதாட்டி சுசீலா (70). இவர், கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது மகன் பாலமுரளி, காட்டூர் கிராமம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மூதாட்டி சுசிலாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் செய்வதறியாது திகைத்த மகன், சாலையில் நின்று கொண்டிருந்தபோது 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொரோனா பாதிப்பாக இருக்குமோ? என்ற பயத்தில் உதவ முன்வராமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
இந்நிலையில், சேலம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த இளையராணி (21) என்ற இளம்பெண் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கண்டவுடன் உடனே இறங்கி வந்து, முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். அப்போது மூதாட்டி சுயநினைவு இல்லாமல் கிடந்தார். மூதாட்டியின் மகனை, நீங்கள் இருசக்கர வாகனத்தை இயக்குங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நான் உதவுகிறேன் என்று மூதாட்டியை தூக்கி இருசக்கர வாகனத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றார்.
இந்தப் பெண் உதவி செய்வதை பார்த்தபின் ஒரு சிலர் உதவ முன்வந்தனர். பின்னர் இளையராணி உதவியுடன் மூதாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் முயற்சி பலனின்றி செல்லும் வழியிலேயே மூதாட்டி சுசீலா பரிதாபமாக உயிரிழந்தார்.