தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு ஓராண்டு நிவைடைந்துள்ளது. இந்த ஓராண்டில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது பற்றியும், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக முதல்முறையாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. கடுமையான சோதனைகளைக் கொடுத்த அந்த மோசமான காலம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் தமிழகத்தில் 8,54,554 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்குப் பின் 8,38,085 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 3952 பேர் உள்ளனர். 12,517 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 275 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்தில் இரண்டாயிரத்து 354 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகஸ்டு மாதம் வரை தொற்று உறுதிசெய்யப்பட்டோர், குணமடைவோர் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஆகஸ்டு மாதத்தில் தான் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. செப்டம்பர், அக்டோபர் மாதம் வரை பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. ஒரு நாளில் 95 ஆயிரம் பரிசோதனைகள் வரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைகளை அதிகப்படுத்தியதால் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். முகக்கவசம் தனிநபர் இடைவெளி, ஊரடங்கு ஆகிவற்றால் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் தொற்று உறுதியாவதும், இறப்பு எண்ணிக்கையும் 50 சதவிகிதம் குறைந்தது.
கடந்த ஓராண்டு கொரோனா பரவல் குறித்த அட்டவணையை பார்க்கும்போது, தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. ஆனால், மாதாந்திர பரிசோதனை, தொற்று ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படும் Positivity rate பிப்ரவரி மாதத்தில் 0.9 சதவிகிதமாக இருந்தது. தற்போது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்த விகிதம் ஒன்றாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதற்கான சான்றுதான் இது. சென்னையில் கடந்த வாரம் 1.45 சதவிகிதமாக இருந்த தொற்று விகிதம் 1.75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 15 நாட்களில் 209 குடும்பங்களில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் 100 க்கும் அதிகமாக இருக்கிறது. தேர்தல் காலம் என்பதால், கூட்டங்கள் சேரும் இடங்களில் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கும் மருத்துவர்கள், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.