கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடு தகரங்களால் அடைக்கப்படுவது வழக்கமான நடைமுறை என நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் வாழும் தெருவை சுகாதாரத்துறை அதிகாரிகள் தகரங்களால் மூடி வந்தனர். இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்து மற்றவர்களும் அங்குமிங்கும் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அரசு அறிவித்தபடி தெருவை மூடாமல், நோய் தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளை மட்டும் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே வரவும், உள்ளே செல்லவும் தடை விதித்த அதிகாரிகள் அவர்களுக்கான உதவியை மேற்கொள்ள பணியாளர்களையும் நியமித்திருந்தனர்.
இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் புதிய தலைமுறை வாயிலாக பேசப்பட்டது. அவர்கள் கூறும் போது “ நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை அடைத்து மற்ற நபர்களுக்கு நோய் பரவாமால் தடுத்து வருகிறோம். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். நோய் தொற்று குணமானதும் அடைப்புகள் எடுக்கப்படுகிறது. ஒரு தெருவில் 3 நபர்களுக்கு மேல் நோய் தொற்று கண்டறியப்பட்டால் தெரு முழுவதும் அடைக்கப்படும். இது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 13 ஆம் தேதி கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த வந்த அவர் அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே அவர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதாக, அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரது வீட்டை தகரங்களால் அடைத்தனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்கான உள்ளான நபர் தங்கள் வீட்டில் இதய நோயாளி இருக்கும் பட்சத்தில் தங்களது வீட்டை இப்படி தகரங்களால் அடைப்பது சரியானது அல்ல எனக் கூறி புகார் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த தகரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அத்துடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடு தகரங்களால் அடைக்கப்படுவது வழக்கமான நடைமுறை எனவும் நகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதய நோயாளி தொற்றுக்கு உள்ளான நபரின் மாமனார் என்பதும், கடந்த 10 வருடத்திற்கு முன்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது கள ஆய்வில் தெரிய வந்தது.