தமிழகத்தில் கடந்த 64 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 700-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்ற நிலையில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளது. மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை மக்கள் எதிர்கொள்ள நேரிடுமா என்ற அச்சத்தை இது விதைத்திருக்கிறது.
சாலைகள் மூடல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ், தொழில் நிறுவனங்கள் மூடல் போன்ற பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் உச்சம் நோக்கி சென்ற கொரோனா தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது. முழுமையாக கொரோனா தொற்று குறையாதபோதும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்தனர். இதனால் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 800 என்ற அளவில் இருந்து குறையத் தொடங்கியது. சில வாரங்களில் 300 என்ற அளவில் குறைந்த ஒருநாள் பாதிப்பு, அடுத்தடுத்த நாட்களில் 400, 500 என அதிகரித்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக, குடும்பம் குடும்பமாய் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை காண முடிவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர். இதனால் மூடப்பட்ட கோவிட் பராமரிப்பு மையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர சுகாதாரத் துறை செயலர் உத்தரவிட்டிருக்கிறார்.
தேர்தல் பரப்புரை கூட்டங்கள், திருமணம், துக்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் அதிகளவில் கூடியதே தொற்று அதிகரிப்புக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது. தஞ்சை அருகே ஒரே பள்ளியில் 56 மாணவர்களுக்கு ஒரேநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில காலமாக மக்களிடையே கொரோனா குறித்த அச்ச உணர்வு தளர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதன் எதிரொலியே இது.
கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் சூழலை சந்திக்க நேரிடலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.