கொரோனா பாதிப்பால் வடமாநிலங்களை போன்ற சூழ்நிலையை மதுரை எதிர்கொண்டுள்ளது. மயானங்களில் குவியும் சடலங்கள் பெருந்தொற்றின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மதுரையில் இதுவரை 41,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33,000-க்கும் மேற்பட்டோர் அதிலிருந்து மீண்டுள்ளனர். அந்த மாநகரில் 600-க்கும் மேற்பட்டோரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,500-ஐ கடந்த நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் அரசுக்கு சொந்தமான தத்தனேரி, மூலக்கரை, கீரைத்துறை ஆகிய மின்மயானங்களில் மட்டுமே எரியூட்டப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் உடல்களும் எரியூட்டப்படுவதால் மயானங்கள் அனைத்திலும் சடலங்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன. தொடர்ந்து உடல்கள் வந்து கொண்டே இருப்பதால் எரியூட்ட முடியாத சூழலில் உடல்களை அரசு மருத்துவமனை பிணவறையிலும் வைக்க முடியாத அளவிற்கு குவிந்து வருகின்றது.
இதனிடையே, மதுரை கீரைத்துறை மின்மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஒரே நேரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களை போல தமிழகத்திலும் சடலங்களை எரியூட்ட மணிக்கணக்காக மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
உடல்களை கொண்டு வரும் குடும்பத்தினருக்கு டோக்கன் கொடுக்கப்படுகிறது. சடலங்களை காத்திருந்து எரிக்க வேண்டிய நிலை உள்ளது. நோய்த்தொற்றின் தீவிரத்தை கணக்கில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.