கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அதே மருத்துமவனையை சேர்ந்த செவிலியர் சாமுண்டேஸ்வரி உயிரிழந்தார்.
தியாகராய நகர் பகுதியை சேர்ந்த செவிலியர் சாமுண்டேஸ்வரிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அங்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் உடம்பில் செலுத்திக் கொண்டார். எனினும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளது சக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே மருத்துவமனையில் பணியாற்றிய இந்திரா என்ற செவிலியரும், வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பிரேமா என்ற செவிலியரும் கொரோனாவால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.