சென்னை கூவம் ஆற்றில் முகத்துவார சீரமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கடலின் முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு ரயில்வே பாலம் வரை சுமார் 9 புள்ளி 6 கிலோமீட்டர் தூரத்திற்கு கூவம் ஆற்றில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். கடற்சார் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு கூவம் ஆற்றை சீரமைக்கலாம் என கூறியுள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இயற்கையாகவே அமைந்த மணல் மேடு மற்றும் நில அமைப்பை மாற்றி அமைக்கக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், கடற்பகுதிக்குள் எக்காரணம் கொண்டும் திட மற்றும் திரவக் கழிவுகள் கலக்கக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 105 கோடி ரூபாய் செலவில் கூவம் முகத்துவார சீரமைப்பு திட்டத்தின் முதற்கட்டப் பணி 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.