கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை உடனடியாக கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தில்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இவர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த சூலில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை ஏன் இன்னும் பணியில் வைத்து உள்ளனர் என கேள்வி எழுப்பினர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஊக்குவிக்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை உடனே பணி நீக்கம் செய்த வேண்டும். மேலும் அவரை கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனைதொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில், அரசியல் விஐபிக்கள், காவல் துறை விஐபிக்களின் தொடர்பு எப்போதும் இருந்து வருகிறது என குற்றம் சாட்டினர். மேலும் சிறுமி கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு தங்களது கூட்டமைப்பின் சார்பில் தண்டனை வாங்கி கொடுப்போம் எனவும் கோவை மாவட்டத்தில் உள்ள பெருவாரியான காவல் துறையினரை களை எடுக்க வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் வைத்தனர். தொடர்ந்து வருங்காலத்தில் இது போன்ற கொடூரங்கள் நடக்காமல் தடுக்க அனைவரும் இதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.