அரசு ஊழியர்களை பணி நியமனம் செய்யும் முன்பு அவர்களது கல்வித் தகுதியை முறையாக சரிப்பார்க்க வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், போலி சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சேர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அரங்கேறியே வருகிறது.
அந்த வகையில் கூட்டுறவு சங்க அலுவலக ஊழியராக 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. அந்த சங்கத்தில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் அலுவலக உதவியாளராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இவர் பணியில் சேர்ந்த போது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக போலி கல்விச் சான்றிதழ்களை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில்தான் அவரது கல்விச் சான்றிதழ்களை சரிப்பார்க்கும் பணியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதில், ஜெயராமன் பள்ளிக்கே சென்றதில்லை என்பதும் அவர் கொடுத்த 8ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் போலியானது என்பதும் அம்பலமாகியிருக்கிறது. இதனையடுத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன் ஜெயராமனை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக் கணக்கான இளம் பட்டதாரிகள் மாங்கு மாங்கென அரசுத் தேர்வுகளுக்கு படித்தும், விண்ணப்பித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தேர்ச்சியே பெறாதவர் கால் நூற்றாண்டு காலமாக அரசு பணியில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே எந்த பணியாளராக இருந்தாலும் அந்த நபர் குறித்த சுய விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தவறாமல் முறையாக சரிப்பார்த்தே நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.