கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுது: தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு

கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுது: தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு
கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுது: தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுது காரணமாக நான்கு யூனிட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 210 மெகாவாட் திறன்கொண்ட 5 பிரிவுகள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவு, இரண்டாவது பிரிவு, மற்றும் மூன்றாவது பிரிவுகள் துவங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

இதில் நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக மின் உற்பத்தியை செய்து வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பிரிவுகளில் கொதிகலன்களில் ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படுவதும் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு பிரிவு மின் உற்பத்தி செய்வதற்காக 5 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தினந்தோறும் 5 பிரிவுகளிலும் மின் உற்பத்தி முழு அளவில் செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். ஆலையை இயக்கும்போது பர்னஸ் ஆயில் கொண்டு இயக்கப்பட்டு பின்னர் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமடைந்துள்ளதால் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் முழு உற்பத்தி திறனுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால், முதலாவது பிரிவில் மட்டும் 159 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தலைமை பொறியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது...

"தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தேக்கி வைக்கும் பகுதியில் சுமார் 10 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருக்கின்றது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறங்கு தளமான ஒன்றாவது தளத்தில் 50 ஆயிரம் டன்னும் இரண்டாவது தளத்தில் 40 ஆயிரம் டன் நிலக்கரி இறங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுது காரணமாக நான்கு யூனிட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மூலம் மட்டுமே 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com