கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் விவேக் மரண விவகாரத்தில் கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் வடபழனி காவல்துறையினர் மன்சூர் அலிகான் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன்சூர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், “ கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்று சொல்லவில்லை. தடுப்பூசியை போடுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னேன்” என விளக்கம் அளித்திருந்தார்.