செய்தியாளர்: ரா.சிவபிரசாத்
பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் சக்தி குமார் (45). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சக்தி குமார், சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு 2,50,000 ரூபாயும், கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவபருக்கு 1,80,000 ரூபாயும் ஆவல் சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கு 8 லட்சம் ரூபாயும் கடனாக கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடன் கொடுத்த பணத்தை அவர்களிடம் திருப்பிக் கேட்டபோது, மூவரும் பணத்தைக் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்தி குமார், “என்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும்தான் எனது மரணத்துக்கு காரணம்” என செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை வாட்ஸ் அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், சக்தி குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.