திண்டிவனம் அருகே தெரு விளக்குகள் பராமரிப்பு வேலையில் ஈடுப்பட்ட போது உயர்மின்அழுத்த கம்பி உரசியதால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (40). இவர் மின்துறை ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மதேசம் அடுத்த நல்லாளம் என்ற கிராமத்தில் மின்சாரம் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று உயர் மின்அழுத்த கம்பியை தவறுதலாக தொட்டதால் உடலில் மின்சாரம் பாய்ந்து மின்சார கம்பத்திலயே தொங்கினார்.
பின்பு அருகிலிருந்த பொதுமக்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு மேலே ஏறி அவரை மீட்டனர். பின்பு உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். மின் ஊழியர் ஒருவர் பணியின் போது மின்சாரம் தாக்கி பலியான இச்சம்பவம் நல்லாளம் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.