தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். வணிகராக சிறு வணிகர்களின் நலன்களுக்காகப் போராடியதோடு, தமிழ் உணர்வு, ஈழ ஆதரவு, நீட்டுக்கு எதிர்ப்பு என தமிழ்நாட்டு உரிமை சார்ந்த விஷயங்களிலும் முன்னணியில் இருந்தவர் வெள்ளையன். அவர் கடந்த வந்த பாதை குறித்துப் பார்ப்போம்..,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்குப் பக்கத்தில் உள்ள பிச்சுவிளைதான் வெள்ளையனின் சொந்த ஊர். இவரின் தந்தை தங்கராஜ் காமராஜருடன் மிகவும் நெருக்கமானவர். அந்தவகையில், வெள்ளையனும் சிறுவயதில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். பின்னர், வணிகரான அவர், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையை ஆரம்பித்து, சிறு வணிகர்களின் உரிமைக்காகப் போராடியவர். சில்லறை வணிகத்தில் மிகப்பெரிய முதலாளிகளை அனுமதிப்பதை கடுமையாக எதிர்த்து வந்தவர் வெள்ளையன்.
“சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனப் போராடுகிறீர்களே,,, உங்கள் பார்வையில் சிறு வணிகர்கள் யார்?” என தனியார் நாளிதழ் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒரு டி.வி.எஸ் சேம்ப்பை வைத்து அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்குப்போய் காய்கறிகளை வாங்கிக் கொண்டு, அதை விற்பனை செய்பவரில் தொடங்கி, தலையில் கூடையை வைத்து வீடு வீடாகப் போய் கீரைகளையும் காய்கறிகளையும் விற்பனை செய்யும் ஆயா வரை சிறு வியாபாரிகள்தான். இவர்கள் வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல, சிறு தயாரிப்பாளர்களும் கூட. ஒரு தயாரிப்பாளர், அப்புறம் விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, பொது மக்களுக்கு நேரடி விநியோகம் செய்பவர்கள் என இந்த வணிகம் ஒரு சங்கிலியைப் போல பலரது உழைப்பு தொடர்பானது. பலருக்கும் வாழ்வளிப்பது'' என அதற்கான விளக்கத்தைத் தந்தார் வெள்ளையன்.. இதிலிருந்தே வெள்ளையனின் பரந்துபட்ட பார்வையை நாம் புரிந்துகொள்ளலாம்.
தான் ஒரு வியாபாரி அதை மட்டும் பார்ப்பேன்,,, வணிகர்களுக்காக மட்டும் போராடுவேன் என்றில்லாமல், காவிரி போராட்டம், மீத்தேன் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் என பல போராட்டங்களில் வணிகர்களை பங்கேற்க செய்தவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு என தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என அனைத்திற்கும் குரல் கொடுத்தவர் வெள்ளையன். எழுவர் விடுதலை, ஈழப் படுகொலை தொடர்பான அனைத்துப் போராட்டங்களிளும் கலந்துகொண்டவர் வெள்ளையன். சிறு குறு கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர்.
அதனால்தான், கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “வணிகர்களுக்கான போராளியாக திகழ்ந்தவர் வெள்ளையன்” என்று திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இரங்கல் தெரிவித்துள்ளார். “தமிழக வணிகர்களின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர் வெள்ளையன்” என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “சிறு வணிகர்களின் நலன்களுக்காக போராடியவர்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். “வெள்ளையன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்” என்று வெள்ளையன் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார். “தமிழ் இனத்தின் மீதான நேசமும், சமூக நல்லிணக்க சிந்தனைகளும் அவரது சிறப்பை அனைத்து தமிழர்களிடமும் கொண்டு சேர்த்தது” என மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகக் களத்தில் நின்ற வெள்ளையனின் மறைவு, வணிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் நேர்ந்த பேரிழப்பு.