கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதை சீரமைக்கும் பணிகள் ஆட்சியர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
கோவை ரயில் நிலையம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு, துடியலூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக பொள்ளாச்சி மற்றும் குறிச்சி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். கடும் குளிரும் நிலவுவதால், உதகையை சுற்றிப்பார்க்கச் சென்ற சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். தொடர் மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இரவோடு இரவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. சீரமைக்கப்பட்டு பகுதிகளை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தளமான ஏற்பாட்டில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அதிக பட்சமாக 8 சென்டி மீட்டர் அளவு மழை பதிவானது. தொடர்ந்து நேற்று மாலை முதல் கொண்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்காடு 40 அடி பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதையில் மண் மற்றும் சிறிய அளவிலான பாறைகள் ஆக்கிரமித்தன. விடுமுறை காலம் என்பதால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர் தீயணைப்புத்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் இரவோடு இரவாக சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு மண்சரிவு ஏற்பட்ட இடத்தை சீரமைத்தனர். தொடர்ந்து சீரமைக்கப்பட்ட பகுதிகளை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மலைப் பாதையில் பயணிப்போர் எச்சரிக்கையோடு வாகனங்களை இயக்கும் வரும் அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஏற்காடு படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் ஏரியில் இருக்கக்கூடிய குப்பைகள் பாட்டில்கள் மிதப்பதைக் கண்ன ஆட்சியர் உடனடியாக அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து தமிழகத்தில் ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.