கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1,689 குடிநீர் உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் மூலம் கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதை தடுக்க உயர்நீதிமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே கேன் உரிமையாளர்கள் நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதாக கூறி வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் கேன் உரிமையாளர்கள் அவர்களது பணிகளை தொடர முடியாத நிலை உருவானது. ஆகவே கேன் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கான வழி வகைகளை அரசு உருவாக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக கேன் உரிமையாளர்கள் முழு வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கேன் குடிநீர் கிடைக்காமல் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சில கடைகளில் விற்பனையாகும் கேன்குடிநீரின் விலையும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்து வரும் கேன் குடிநீர் நிறுவனங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.