கடலூர் அருகே மருத்துவர்கள் இருவர் மோதிக்கொண்டதில் மருத்துவர் ஒருவருக்கு மூக்கு உடைந்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விக்கிரமன் என்ற மருத்துவர் பணியாற்றி வருகிறார். விக்ரமனுக்கு சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் என்பவர் தொடர்ந்து கொரோனா பணி ஒதுக்கீடு செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தன்னால் தொடர்ந்து பணி செய்ய முடியாது என்று மருத்துவர் விக்ரமன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் செல்போன் மூலமாக சண்டையிட்டு உள்ளனர். அதன்பின் தனது ஓட்டுநர் பாலமுருகன் மற்றும் மருத்துவ பணியாளர் சிவாவுடன் விக்ரமன் இருக்கும் இடத்திற்குச் சென்ற மருத்துவர்குணபாலன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் சட்டையைப்பிடித்து சண்டை போட்டுள்ளனர். அப்போது மருத்துவர் குணபாலனுக்கு ஆதரவாக அரசு ஓட்டுனர் பாலமுருகன் மற்றும் மருத்துவபணியாளர் சிவா ஆகியோர் விக்ரமனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் விக்ரமனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழியத் தொடங்கியது. இதுகுறித்து விக்கிரமன் குமராட்சி காவல் நிலையத்தில் புகார்அளித்துள்ளார். புகாரின் பேரில் மருத்துவர் குணபாலன் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்யப்பட்டனர்