செய்தியாளர்: மகேஷ்வரன்
கூடலூர் சுற்று வட்டாரங்களில் பெரும் பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. தூர்வாரும் பணிகள் நடக்காததே இந்த நிலைக்கு காரணம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். அவலாஞ்சியில் ஒரேநாளில் 34 சென்டிமீட்டர் மழை. அப்பர் பவானியில் 22 சென்டிமீட்டர்.
இப்படி எண்களை கேட்டாலே மிரளும் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்துள்ளது. இப்பகுதிகளில் குடியிருப்புகள் அதிகளவில் இல்லாத காரணத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அதே நேரம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டியது.
தேவாலாவில் 15 சென்டிமீட்டர், பந்தலூரில் 14 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மரம் மற்றும் மண்சரிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் பகுதிக்கு 20 தமிழ்நாடு பேரிடர் மற்றும் மீட்பு படையினர் வந்தடைந்தனர். குச்சிமுச்சியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
மாயார் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக தெப்பக்காடு தரைபாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக கூடலூர் - மசினகுடி இடையே போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் மூங்கில்கள் பாலத்தின் மதகுகளை அடைத்துக் கொண்டதால் பாதிப்பு அதிகமானது.
அடைப்புகள் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டது. தொரப்பள்ளி பகுதியில் உள்ள இருவயல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த கிராமத்தில் உள்ள 14 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. 9 குடும்பங்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு சென்ற நிலையில், 5 குடும்பங்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டன. தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.
கோக்கால் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்த நிலையில், அங்குள்ள மக்களை வருவாய்த் துறையினர் மீட்டு முகாமில் தங்க வைத்தனர். கோக்கால் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட விரிசல் அதிகரித்த நிலையில், அங்குள்ள மக்களை வருவாய்த் துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். ராஜகோபாலபுரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே லேசான அளவில் மண்சரிவு ஏற்பட்டது.