நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டை, கண்மாய், ஊரணி, ஏரி ஆகியவை மளமளவென நிரம்பி வருகிறது. இந்த ஏரிகளை மாவட்ட நிர்வாகம் 24மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பேராபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு பல மீட்புக் குழுக்களை அமைத்து தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சமடைய வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை கொக்கிரகுளம் அருகே தாமிரபரணி ஆற்றில், இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. குறுக்குத்துறை முருகன் கோயிலை தண்ணீர் சூழ்ந்தவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை மற்றும் மணிமுத்தாறு அணையிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கின்றது.