நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தரம் மற்றும் காலாவதியாகும் நாள் ஆகியவற்றை ஆய்வு அலுவலர்கள் கண்காணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், திருவள்ளூர் மண்டலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் இருந்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டதில், 14 மளிகைப் பொருட்களை பையில் வைக்கும்போது, தற்போது பெறப்பட்ட டீ தூள் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, தவறுதலாக நியாயவிலைக் கடைகளில் ஏற்கனவே இருப்பில் இருந்த டீ தூள் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டதாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் ஆய்வு அலுவலர்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஊட்டி டீ தூள், பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றின் காலாவதி தேதிகளை தவறாமல் சரிபார்த்து, தேதி முடிவடைந்த பொருட்களை உடனுக்குடன் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.