தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஆன்லைன் முன்பதிவில் இரண்டு மடங்கு அதிகரிப்பு செய்துள்ளதால் பேருந்துப் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 2,300 ரூபாய் வரை கட்டணம் இருக்கிறது. அதேபோல் கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 3500 ரூபாய வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ஆன்லைன் முன்பதிவில் காட்டுகிறது. எனவே இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.