சென்னையை அடுத்த திருமழிசையில் வரும் 10ஆம் தேதி முதல் காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 500 பணியாளர்கள் தற்காலிக கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 10ஆம் தேதி முதல் கடைகள் செயல்பட தொடங்கும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. மொத்தமாக காய்கறிகள் வாங்க வியாபரிகள் வரலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருமழிசை சந்தை அமைக்கும் பணிகள் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.