செய்தியாளர்: மருது பாண்டி
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 7-வது பொருநை புத்தகத் திருவிழா நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடந்து வருகிறது. இதற்காக 110 அரங்குகள் அமைக்கப்பட்டு பல முன்னணி பதிப்பங்களின் அரங்குகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலை புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய நிகழ்வு நடந்து வருகிறது இந்நிலையில், நேற்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, யாவரும் கேளிர் என்ற தலைப்பில் பேசுகையில்....
“அன்றே சொன்னார் கணியன் பூங்குன்றனார்”
“கல்விக் கூடங்களில் ஜாதி இடர்பாடுகளை களைவது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு என்னை பணித்துள்ளது. நாங்குநேரி பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைதாகி பிணையில் தற்போது இருக்கிறார்கள். அவர்களை சந்தித்த நான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பற்றி விவாதித்தேன். பாரதப் பிரதமர் ‘பசு தேவ குடும்பகம்’ என்று அடிக்கடி சொல்கிறார். ஆனால் கணியன் பூங்குன்றனார், அதற்கு முன்னமே உலகமே ஒரு குடும்பம்தான் என்று தெரிவித்துள்ளார்“
“ராஜ்பவனில் உள்ளவர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்க்கிறார்”
“தமிழகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார். ஆனால், ராஜ்பவனில் உள்ளவர் அவருக்கு காவி உடை அணிவித்து அழகு பார்க்கிறார். திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தால் இதனை சொல்லி இருக்க மாட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனதான ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்காக உத்தரபிரதேசத்தில் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுவதற்கு 10 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ 'இரண்டு ரூபாய் கொடுங்கள் போதும்; நான் என் தலையை சீவிக் கொள்கிறேன்' என விளையாட்டாக கூறினாலும் அதில் பல அர்த்தங்கள் உள்ளன“
பிறப்பாலேயே சமமற்ற தன்மையை உருவாக்குவதுதான் மனுதர்மம்:
“மனுசாஸ்திரத்தில் பல காலகட்டங்களில் பல்வேறு விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிறப்பாலேயே சமமற்ற தன்மையை உருவாக்குவதுதான் மனுதர்மம் என்ற சாஸ்திரம். ஜாதியை பிரிவினை பேசுவதாகவே மனுதர்மம் உள்ளது. இந்தியாவிலே மனுவுக்கு என்று ஒரு சிலை உள்ளது. அது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் அமைந்துள்ளது. அது அவமானத்தின் சிலை. சென்னையில் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு சிலை உள்ளது. அதுவும் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து பூட்டி வைத்திருக்கிறோம். ஆனால் மனு சிலைக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது”
“மனுதர்மம், மதத்தால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது”
“தற்போதுதான் அம்பேத்காருக்கு உச்ச நீதிமன்றத்தில் சிலை அமைத்துள்ளார்கள். மனுதர்மம், மதத்தால் மக்களை பிரிக்கப் பார்க்கிறது. அயோத்தியில் பால ராமருக்கு சிலை வடிவமைத்தவர்கள் கூட கடந்த 22 ஆம் தேதிக்கு பின்பு அந்த சிலையை தொட அதை வடிவமைத்தவர்களுக்கு உரிமை கிடையாது. பிரதமரை கூட சங்கராச்சாரியார்கள் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்துக்களின் ஆவணங்களில் சைவம், வைணவம் என்றுதான் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள்தான் அவர்களை இந்துக்கள் என மாற்றினர்”
“இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது”
“மக்களிடம் மாயத் தோற்றத்தை உருவாக்கி சமய வேறுபாடுகளை உருவாக்குவதாக சனாதனம் திகழ்கிறது. ஒருவர் விரும்பும் மதத்தை பின்பற்ற இந்தியாவில் உரிமை உள்ளது. சமதர்மம், சுயாட்சி, ஜனநாயக குடியரசு ஆகியவற்றை ஒழிக்க செய்யும் வகையில் சனாதனம் உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். 75 ஆண்டுகளாக இந்தியா உயிர்ப்புடன் இருப்பதற்கும், மக்களைச் சமமாக நடத்துவதற்கும் அரசியலமைப்புச் சட்டமே காரணம்.
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்தால் மட்டுமே யாவரும் கேளீர் என்பது காப்பாற்றப்படும். மதச்சார்பற்ற, இறையாண்மை மிகுந்த நாடாக இந்தியா தொடர வேண்டுமானால் மக்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். மனுநீதியா, சமநீதியா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார்.