திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேலவாளாடி ரயில்வே சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் கிடந்த பழைய லாரி டயர்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது மேலவாளாடி தண்டவாளத்தில் கிடந்த டயர் அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவரது என தெரியவந்தது. இதையடுத்து லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசாருடன் ரயில்வே போலீசார் இணைந்து கன்னியாகுமரி விரைவு ரயில் சதி நடந்த இடத்தில் உள்ள செல்போன் டவரில் சம்பவ நேரத்தில் பதிவான 10க்கும் மேற்பட்ட செல்போன் எண்ணுடைய நபர்களை பிடித்து சமயபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ரயிலை கவிழ்க்க லாரி டயரை வைத்த நபர் யார் என்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் ரயில்வே தனிப்படை போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர்.
ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த மோப்ப நாய் சிறிது தூரம் சென்று ரயில்வே பாலம் அருகே உள்ள வைகுண்ட விநாயகர் பாலமுருகன் கோயில் அருகே படுத்துக் கொண்டது. ஆனால், மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. மோப்ப நாய் பாலத்தின் அருகே படுத்த இடத்தில் இருந்து தான் சதிகாரர்கள் புறப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.