செய்தியாளர்: விக்னேஷ்முத்து
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இவர். காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருவதே தனது விலகலுக்கான காரணம் என விஜயதாரணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வில் இணைந்த விஜயதாரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு விஜயதாரணி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் விஜயதாரணி பகிர்ந்துள்ளார். 3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தொடர் வெற்றி பெற்ற விஜயதாரணி, இம்முறை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு எம்.பி. சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அதுகுறித்து எவ்வித தகவலும் காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலையில், நேற்று விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயதாரணிக்கு பாஜகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.