சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 25, 1989இல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது. அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்... நகைத்தனர்!
அப்படியான நீங்கள் (கனிமொழி பேசியதற்கு பதில்), இன்று கௌரவர் சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள். அந்த நாளில்தான் ஜெயலலிதா ‘இனி நான் முதல்வராகாமல் அவைக்கு வரமாட்டேன்’ எனக்கூறி சென்றார். சொன்னபடியே செய்தார். அன்று ஜெயலலிதாவை பேசியவர்கள், இன்று திரௌபதி பற்றி பேசுவது, அதிர்ச்சியாக இருக்கிறது” எனக் கடுமையாகப் பேசியிருந்தார். இது தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் விவாதப் பொருளாக மாறியது. பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை பிடித்து இழுக்கப்பட்டதாக சொல்லப்படும் அன்றைய நாளில், அப்போதைய அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தவர், இன்றைய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தலைமுறைக்கு பேசிய திருநாவுக்கரசர், “அப்போதைய முதல்வர் கருணாநிதி, பட்ஜெட்டை சிறிய மேஜை மீது வைத்து வாசித்தார். அப்படி பட்ஜெட் வாசிக்கும்போது, பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கருணாநிதி சத்தம் போட்டுத் திரும்பியபோது, அவரின் கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அவர் தடுமாறினார்.
உடனே, மூத்த அமைச்சர்கள் முதல்வரை, அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த நேரத்தில், பின் இருக்கைகளில் இருந்த, தி.மு.க. - எம்.எல்.ஏக்கள், கருணாநிதியின் முகத்தில், அ.தி.மு.க. - எம்.எல்.ஏக்கள் குத்திவிட்டதாக நினைத்துவிட்டனர். இதனால், பட்ஜெட் புத்தகங்களை எங்களை நோக்கி வீசினர். ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும், கே.கே.எஸ்.எஸ்.ஆரும் (தற்போது திமுக அமைச்சர்) நின்றோம்.
அப்போதும், சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையிலும், என் மீதும் விழுந்தன. புத்தகம் விழுந்ததால், ஜெயலலிதாவின் தலை கலைந்தது உண்மை. உடனே வீட்டிற்குப் போகலாம் என்றதும், ஜெயலலிதா ’சரி’ என்றார்; வீட்டிற்குச் சென்றுவிட்டோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அடிதடியோ, ரத்தகாயங்களோ கிடையாது. கருணாநிதி (மறைந்த முன்னாள் முதல்வர்) முகத்தில் குத்திவிட்டதாக தி.மு.கவினரும், ஜெயலலிதா சேலையைப் பிடித்து இழுத்ததாக அ.தி.மு.கவினரும் பிரசாரம் செய்தனர். ஆனால், இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, ”திருநாவுக்கரசர் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவர். அவரைச் சமூகத்தில் யார் என்பதை முன்நிறுத்தியது அதிமுகதான். அன்றைய தினம் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது மறுநாளே கருணாநிதிக்கு எதிராக பேட்டியளித்த திருநாவுக்கரசரின் வாய் இன்று மாற்றி பேசுகிறது.
இவர் எப்படி ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியும். பொதுவாக கொள்கை பரப்பு உள்ளவர்கள் ஒரு முறை ஒரு கருத்தை தெரிவித்தால் அதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் திருநாவுக்கரசர் போன்ற பதவி ஆசை மோகத்தில் இருப்பவர்களுக்கு நிலையான தலைவர் என்பது கிடையாது. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியில் சேர்ந்து விடுவார்கள். கொள்கை என்பதே கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ””அதிமுகதான் என்னை அடையாளம் காட்டியது. எம்.ஜி.ஆர்தான் எனக்கு கடவுள் மாதிரி. அவர்தான் என்னை வளத்தார்; உருவாக்கினார். அவர்தான் என்னை எம்.எல்.ஏவாக்கினார்; மந்திரியாக்கினார். அதை கே.பி.முனுசாமி சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இந்த முனுசாமியையே நான்தான் இளைஞர் அணியில் போட்டேன். அப்போது நான் இளைஞர் அணியில் இருக்கும்போது என்னுடைய எதிர் அறையில் அவர் இருந்தார். நான்தான் அவரை மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராகப் போட்டேன். அவருக்குத் தெரிகிற அதிமுக எனக்குத் தெரியாதா? எனக்கே வரலாறைச் சொல்லித் தருகிறார்களா” என்றவரிடம்,
”1989இல் சம்பவம் நடைபெற்றபிறகு மறுநாள் கொடுத்த பேட்டிக்கும் தற்போது கொடுக்கக்கூடிய பேட்டிக்கும் வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “என்னா, அதிமுகவிலிருந்து இருந்துகொண்டு திமுகவை வாழ்த்தச் சொல்கிறீர்களா? எதிர்பார்க்கிறீர்களா? அதேமாதிரி காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுகவை வாழ்த்தச் சொல்கிறீர்களா? ஒரு மனிதன் அரசியல்ரீதியாக எதைச் சொல்ல முடியுமோ, எது சாத்தியக்கூறோ அதனுடன் எது உண்மையோ அதை கூடுதலாக சேர்த்துச் சொல்ல முடியும். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். அப்பவும் சொன்னேன். இப்பவும் சொன்னேன். எப்பவும் சொல்வேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், “இந்த சம்பவம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறாரா” எனக் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், ”அன்று, நிர்மலா சீதாராமன் இந்தியாவுலேயே கிடையாது. 35 வருடங்களுக்கு முன்பே அந்த அம்மா லண்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 1991இல்தான் அந்த அம்மா இந்தியாவுக்கே வந்தார். அப்போது, தமிழக சட்டசபையில் நடந்தது குறித்து என்ன தெரியும்? தமிழிசை செளந்தரராஜனுக்கு என்ன தெரியும்? அவர் அப்பாதான் என்னருகில் அமர்ந்திருந்தார். தமிழிசை அப்போது பள்ளியில் எங்காவது படித்துக் கொண்டிருப்பார். அத்துடன் அவர், கவர்னர். கவர்னர், கவர்னராக நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பேச வேண்டும் என்றால் ரிசைன் பண்ணிவிட்டு வந்து பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.