பெரம்பலூர் | “திமுக கூட்டணியில் அடிமைப் போல காங்கிரஸ்...” காங்கிரஸ் தொண்டர் பரபரப்பு கருத்து!

“மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஏன் இந்துக்களுக்கும் எதிரான கட்சி பாஜக” என பெரம்பலூர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்
காங்கிரஸ் தொண்டர்புதிய தலைமுறை
Published on

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை ‘காங்கிரஸ் பேரியக்கத்தை பலப்படுத்துவது’ என்பது குறித்து கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “139 ஆண்டுகள் மக்கள் பேரியக்கமான காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியாமல் நாட்டுக்காக ரத்தம் சிந்தி வாழ்வை தியாகம் செய்த அன்னை இந்திரா, ராஜிவ் காந்தி, நேரு மற்றும் கர்மவீரர் காமராஜ் போன்றோரை விமர்சித்து பேசி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தனது விமர்சனத்தை நிறுத்தாவிடில் காங்கிரஸ் தொண்டர்கள் தமிழ்நாட்டில் அவரை நடமாட விடமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும் த.வெ.க தலைவருமான விஜயும் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் நடிகர் விஜய் திமுக, காங்கிரஸ் பாதையில் பயணிப்பதாக அண்ணாமலை விமர்சிப்பது நாகரீக மற்ற செயல்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தொண்டர்
பிரிட்டன்: ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி.. தோல்விக்கு பொறுப்பேற்பதாக ரிஷிசுனக் அறிவிப்பு!

காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறுவதை மறுத்து பேசிய அவர், “நீதிமன்ற தடையை வாபஸ் பெற்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவும் சேர்ந்துதான் நீட்டை திணித்தது. மாணவர்கள் புரட்சி, நாட்டின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது; மாநிலங்களை மாற்றியுள்ளது. நீட் விவகாரத்தில் மதிப்பெண் குளறுபடியை முதலில் வெளிக்கொணர்ந்ததே மாகாராஷ்ட்டிரா மாநில மாணவர்கள்தான்.

மோடி தலைமையிலான இந்த பா.ஜ.க அரசு மாணவர்கள், இளைஞர்கள், சிறுபான்மையின மக்கள் விளிம்புநிலை மக்கள் ஏன் இந்துக்களுக்கே எதிரான கட்சி. கூட்டணி கட்சியினரான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் நெருக்கடி கொடுத்துவர கம்பி மேல் நடப்பதுபோல் நகர்ந்து வருகிறது மத்திய அரசு” என்றும் விமர்சித்தார்.

முன்னதாக செல்வப்பெருந்தகை வருவதற்கு முன்பாக தொண்டர்களுடன் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மேடையேறி பேசிய சில மூத்த தொண்டர்கள், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் அடிமைப்போல் உள்ளது. அவர்களிடமிருந்து ஒன்றைகூட நம்மால் பெற முடியவில்லை. நாமும் அதற்கேற்றார் போல அவர்களை எதிர்க்கட்சியாக நடத்த வேண்டும். திமுக-வை எதிர்த்து மக்களோடு மக்களாக நாம் ஆர்ப்பாட்டம் செய்தால்தான் காங்கிரஸ் கட்சி வளர முடியும்” என வேதனை தெரிவித்தனர். இதேநிலை நீடித்தால் காங்கிரஸ் கட்சியை காக்க முடியாது என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com