தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் தலைமையேற்று பேசிய தவெக தலைவர் விஜய் நேரடியாக திமுக அரசை விமர்சித்தது மட்டுமில்லாமல், “திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு” என பல அதிரடியான கருத்துகளை முன் வைத்தார்.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தானது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு விஜய் பேசியதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் பேசியதன் எதிரொலியாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் சரவணன், ”தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மண்புமிகு முக ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்,
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள், நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026-ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும்.
தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன்உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
ஏற்கனவே காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தவெக தலைவர் விஜய் பேசியதை குறிப்பிட்டு “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இப்படி கடிதம் எழுதியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.