செய்தியாளர்: நவீன்குமார்
பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் (இன்றும் நாளையும்) பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்வு பிப்ரவரி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், “தொடர்ந்து இந்திய மக்களுக்கு பல்வேறு அநீதிகளை செய்து வரும் மோடி தமிழக மண்ணில் கால் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு பலூன் பறக்க விடப் போகிறேன்” என கூறியிருந்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டத்தை நடத்தப் போவதாகவும், இதில் திரளாக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார் அவர்.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை, மதுரவாயல் போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இவர், கடந்த ஏப்ரல் மாதம் மோடி சென்னை வருகையின் போது கோ பேக் மோடி மற்றும் கருப்பு பலூன்களை பறக்க விட திட்டமிட்டிருந்ததால் மதுரவாயல் போலீசார் அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருந்த பலூன்களை பறிமுதல் செய்ததோடு, வீட்டுக் காவலிலும் வைத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீஸார் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அவர் வீட்டை விட்டு வெளியே வராதவாறு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.