காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சேலம் தேவதாஸ் அக்கட்சியிலிருந்து விலகினார்.
பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது தந்தை ராமசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சேலத்தில் போட்டியிட்டு தேவதாஸ் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானது. மீண்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவான போதிலும், அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்த தேவதாஸ், திடீரென தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முறையான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அவர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவதாஸ், தலைமையிடம் இருந்து உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால், கட்சியில் இருந்து விலகுவதாகவும், உண்மையான தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர், மூப்பனார் போல் தலைவர் கிடைக்காமல் மாநில தலைமை வெற்றிடமாக இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை கூட காங்கிரஸ் தலைமை தேர்வு செய்யாமல் கோஷ்டிகளுக்கு பங்கு பிரித்து தருவதாகவும் தேவதாஸ் கடுமையாக விமர்சித்தார்.