குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவி வளர்மதிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படித்து வந்த மாணவி வளர்மதி, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறை, வளர்மதி நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டியிருந்தது. அதன்படி கோவை உள்ள சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்றம், வளர்மதியின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.