மேட்டூர் அனல்மின் நிலைய நிர்வாகம் சொத்து வரியை உடனடியாக செலுத்தாவிட்டால் ஜப்தி செய்யப்போவதாக பேரூராட்சி அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் கடந்த 1987 ஆம் ஆண்டு 1,733 ஏக்கரில் சுமார் 352 கோடி ரூபாய் செலவில் 840 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 600 மெகாவாட் திறன் கொண்டு மேலும் ஒரு புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு அனல்மின் நிலையங்களும் சுமார் 3,000 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்ச்சாலை கட்டிடம் மற்றும் குடியிருப்பு என மொத்தம் சுமார் 700 கட்டிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கான சொத்துவரியை 1993 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளாக சுமார் 6 கோடி ரூபாயை கட்டாமல் அனல் மின் நிலைய நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பி.என்.பட்டி பேரூராட்சிக்கு வரவேண்டிய 6 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துவரி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தணிக்கையின் போதும் பேரூராட்சி செயல் அலுவலர்களே இதற்கு பொறுப்பாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அனல் மின் நிலைய கட்டிடவியல் மேற்பார்வை பொறியாளர் மற்றும் மேற்பார்வை உதவி பொறியாளர் ஆகியோருக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று தெரிவித்தும், சொத்துவரியை செலுத்துவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பேரூராட்சிக்கு கடுமையான நிதி சுமை ஏற்பட்டுள்ளது. எனவே அனல் மின் நிலைய நிர்வாகம் உடனடியாக நிலுவையில் உள்ள சொத்துவரியை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மேட்டூர் அனல் மின் நிலையத்தினை ஜப்தி செய்ய பேரூராட்சி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணியிடம் கேட்டபோது, அனல்மின் நிலையத்துக்கு சொத்துவரி குறித்து முறையாக பலமுறை கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்தவிதமான தகவலையும் அனல்மின் நிலைய நிர்வாக தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜப்தி செய்வது குறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனை படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.